சென்னை:சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.12) ஆய்வு செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் 750 படுக்கை அமைப்புகளுடன் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து, வேறு எங்கேயும் யாருக்கும் பட்டாசுகள் வெடிப்பின்போது பாதிப்பு ஏற்படவில்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தனியார் மருத்துவமனைகளிலும் விவரங்கள் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆவடியைச் சேர்ந்த ஒருவர் உள்பட என இருவர் பட்டாசு வெடித்து இரண்டு சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த இருவருக்கும் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. இருவருமே தற்போது நலமாக உள்ளனர்' என தெரிவித்தார்.