தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கு மசோதா குறித்து ஆயூஷ் அமைச்சகத்திற்கு விளக்கப்படும் - அமைச்சர் மா.சு - நீட் விலக்கு மசோதா குறித்து

நீட் விலக்கு மசோதா (NEET Exemption Bill) குறித்த விளக்கக் கூடிய வகையில், விரைவில் ஆயூஷ் அமைச்சகத்திற்கும் அனுப்பப்படும் எனவும், வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் 4 மாதங்களில் முடிவடையும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 22, 2023, 10:06 PM IST

நீட் விலக்கு மசோதா குறித்து ஆயூஷ் அமைச்சகத்திற்கு விளக்கப்படும் - அமைச்சர் மா.சு

சென்னை:வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீர் அமைக்கும் பணிகள் 4 மாதத்திற்குள் நிறைவடையும் எனவும், நீட் விலக்கு மசோதா குறித்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.22) காலையில் கிண்டி கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (King Center for Disease Prevention and Research, Guindy) கட்டப்பட்டு வரும் மருத்துவமனையினையும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், சாலை அமைக்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனை பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் 2-வது முறையாக ஆய்வு: 18 துறைகள் இணைந்து ரூ.230 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள வசதிகள் அமைத்தல், தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகளையும், பசுமைக்கட்டடமாக அமைப்பதற்கான அவசியத்தையும் பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு மேற்காெள்வதால் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னையில் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்பதற்கு, சென்னை மாநகராட்சியில் 209 கி.மீ. நீளத்திற்கு ரூ.699 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் துவக்கப்பட்டு, 161 கி.மீ பணிகள் வடகிழக்குப் பருவ மழை காலத்திற்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்தது. இதன் காரணமாக, மழைநீர் தேங்கவில்லை. பொதுமக்களிடம் பாராட்டினை பெற்றது. மீதமுள்ள 48 கி.மீ., பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட வண்டிகாரன் தெரு, மசூதி தெரு, பிள்ளையார் கோயில் தெருவில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

ஜீபூம்பா பணியில்லை:மேலும், மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட சாலைகள் சீர்செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சீரமைக்கும் பணி என்பது இன்னும் நான்கு மாதத்திற்குள் நிறைவடையும். இந்தப் பணி ஜீபூம்பா பணி இல்லை. முறையாக சாலைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 4 மாதத்திற்குள் முடிவடையும்.

முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும்பொழுது கழிவுநீர் குடிநீரில் கலப்பதாகவும், தெரு நாய்களின் தொல்லை குறித்தும் புகார்கள் வந்தன. அதனைத் தடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, தெருநாய்கள் பெருக்கத்தைத் தடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும்.

நாய்களை கொல்வதற்கு அனுமதி இல்லை. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த மட்டும் முடியும் என்பதால், அவற்றை அழிப்பதற்கான பணிகளை மாநகராட்சி செய்ய முடியாது.

நீட் விலக்கு மசோதா:மேலும், வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சென்னை மீள்வதற்கு அரசுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் வரும் 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. நீட் விலக்கு மசோதா (NEET Exemption Bill) குறித்து ஆயூஷ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்துறையுடன் கலந்துப் பேசி இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் ஆயூஷ் அமைச்சகத்திற்க அனுப்பி வைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் படிக்க வரும் வெளிமாநில மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ABOUT THE AUTHOR

...view details