சென்னை :தமிழ்நாடு முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நாளை 2,000 இடங்களிலும், அவற்றில் சென்னையில் 100 முகாமும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றன. அந்தவகையில், அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1,000 என்று அறிவிக்கப்பட்டு 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்று, அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். மழைப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தினால், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நாளை (2.12.2023) அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் 2,000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம்:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2009ஆம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை, 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்திற்கான அட்டையினை பெற்று இருக்கின்றனர். டிசம்பர் 2ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
புதியதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர்கள் போன்றோர்கள் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் 100 இடங்களில் முகாம் நடைபெற இருக்கிறது. அதில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்ட 5 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நடைபெறும் காப்பீட்டு முகாம்களில் பங்கேற்று தங்களுக்குரிய காப்பீடு அட்டையினை பெற்று பயன்பெற வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல்! வீரட்டானேஸ்வரர் கோயிலில் தொண்டர்கள் கூட்டு பிரார்த்தனை!