சென்னை: சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை ரோண்டம் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படுகிறது. மேலும் சென்னை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப சோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது தென்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விவரங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் முழுமையாக சேகரிக்கப்பட்டு, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- "கடந்த 2 வாரங்களாக ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் சுகாதார துறை செயலாளர் சுற்றிக்கை அனுப்பினார்.
கரோனா தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முழு மரபணு பரிசோதனை கூடம் தமிழகத்தில் இருப்பதால் ஒமிக்கிரான் கண்காணிப்பு இருந்து வருகிறது. உருமாற்றம் 10க்கும் மேலாக உள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 10க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் XBB வகை கொரோனா தான் உறுதியாகி வருகிறது. உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் BA5 கொரோனாவின் உள் வகையான பாதிப்பும் BF7 வகை கொரோனா தான் சீனாவில் பாதிப்புகள் அதிமகாக காரணமாக உள்ளது. முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு, படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் வசதி ஆய்வு செய்தார்.