சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த மாதம் 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இன்றோடு 20 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்த மருத்துவமனையை திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக இங்கே நாள்தோறும் சிகிச்சைக்கு பொதுமக்கள் பெரியளவில் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 300 முதல் 400 பேர் சிகிச்சைக்காக புற நோயாளிகளாக வருகின்றனர். 15ஆம் தேதியிலிருந்து இன்று வரை இங்கே சிகிச்சைக்காக வந்தவர்கள் எண்ணிக்கை 5,176 ஆகும். மேலும் ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
3ஆம் தேதியிலிருந்து உள்நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக 22 பேர் இங்கே உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு டயாலிசிஸ் வார்டு மற்ரும் அறுவை சிகிச்சை அரங்கு 15 உள்ளது. திங்கள்கிழமை முதல் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடங்க உள்ளது. காப்பீட்டு திட்டத்தின் கீழும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். மேலும், இந்த மருத்துவமனையில் நடைபெறக்கூடிய பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக நிறைவடையும். தொடங்கிய சில நாட்களே தினமும் 400 பேர் வந்து செல்வது சாதனைதான். இங்கு மொத்தம் 133 மருத்துவர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனையில் அதிதொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் இருக்கின்றன" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்குவதும், பரபரப்பாகுவதும் சங்கடமாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பெற்றிருக்கிறோம்" என தெரிவித்தார்.