சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருந்து இருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 46 சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார இயக்குநர்கள், இனை இயக்குநர்கள், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குநர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதற்கு முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முதல் தவணை 96% விழுக்காடு இரண்டாம் தவணை 91% விழுக்காடு செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், அக்டோபர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாகச் செலுத்த மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாகக் காலம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு சுகாதாரத்துறை கோரிக்கை வைத்து இருந்தது.
அதனால் கையிருப்பில் வைத்துள்ளதைக் கொண்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. விரைவில் அவற்றைச் செலுத்தி முடிக்க வேண்டுமெனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.
மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குப் புதிதாக 25 ஆரம்பச் சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை எங்கு துவங்குவது என்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 708 நகர்ப்புற சமூகநல மையம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறினார்.