சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் 'உரிமைத்தொகை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது வரும் செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முன்னதாக ஜூலை 24ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவைத் தொடங்கிவைத்தார். தற்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னையில் முதல்கட்டமாக 98 வார்டுகளில் மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்களை இன்று(ஜூலை 27) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 3 கட்டங்களாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இதற்காக முன்னரே, விண்ணப்ப படிவங்கள் பொது மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை முகாம்கள் மூலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.