தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு - PTR Audio Leaked Issue

அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு என சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியுள்ளதற்கு முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 25, 2023, 10:49 PM IST

Updated : Apr 25, 2023, 11:10 PM IST

அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை:இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை வெளியிட்டுள்ள சி.ஏ.ஜி அறிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , “குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றிற்கான தடையாணை நீடிக்கிறது. இந்த தடையாணையை மீறுபவர் மீது சட்டப்படி உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, சி.ஏ.ஜி அறிக்கை குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒன்றிய அரசின் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-ல் இருந்து 2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி கைவசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கணினியில் இருந்தே ஆன்லைன் மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் முறைகேடு:முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி தன்னுடைய உறவினர்களுக்கு முறைகேடாக டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாக கூறுகிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் சரியான பயனாளர்களை தேர்வு செய்யவில்லை. இதன் மூலம் ரூ.1500 கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது. இது போன்று காவல்துறையினருக்கு வீடு கட்டும் திட்டம், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மற்றும் காலணி வழங்கும் திட்டம், புத்தகப் பைகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முறையாக செயல்படுத்தவில்லை என சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிக்கல்வித்துறை நிதியில் ரூ.1,627 கோடி செலவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. கரப்ஷன், கமிஷன், கலக்‌ஷன் ஆட்சியாகத்தான் அதிமுக ஆட்சி இருந்துள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

PTR Audio Leaked Issue:இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், “அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து அண்ணாமலை வெளியிட்ட வீடியோவிற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது அண்ணாமலை வெளியிட்ட வீடியோவை நான் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருவாயில் ரூ.30,000 கோடி குறைக்கப்பட்டுள்ளதாக பேசிய ஆடியோவை வெட்டி, ஒட்டி வெளியிட்டுள்ளதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தெளிவாக விளக்கம் அளிப்பார்” எனக் கூறினார்.

ஜி-ஸ்கொயர் நிறுவனம் (G-Square) மீது நடத்தும் வருமான வரி சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சோதனை செய்வது வரிமான வரித்துறையினர் வேலை, அதை அவர்கள் செய்கின்றனர். திமுக எம்.எல்.ஏ வீட்டில் சோதனை நடந்தால், திமுகவில் யாரும் தொழில் செய்யக்கூடாதா?” என கேள்வியெழுப்பினார்.

மேலும், “சி.ஏ.ஜி அறிக்கையில் கூறிய அனைத்து ஊழல்களையும் முதலமைச்சர் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:PTR TAPE 2: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ!

Last Updated : Apr 25, 2023, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details