சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை பல் மருத்துவம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடப்பங்கீடு குறித்து கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தாெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 2022-23ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடப் பங்கீடு குறித்து விதிகளுக்குட்பட்டு ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு கல்வியாண்டிற்கு முன்னால் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக அரசிற்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கு உள்ள இடங்களின் பங்கீடு குறித்து விவாதிப்பது என்பது வாடிக்கையாகும். தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்டப் படிப்புகள் படிப்பதற்கு 18 சுயநிதி கல்லூரிகள், முதுநிலை பல் மருத்துவம் படிப்பதற்கு 16 சுயநிதி கல்லூரிகள், இளநிலை மருத்துவம் படிப்பதற்கு 19 சுயநிதி கல்லூரிகள் மற்றும் இளநிலை பல் மருத்துவம் படிப்பதற்கு 20 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 சிறுபான்மையினர் கல்லூரிகளாகும்.
அந்த வகையில் 2022-23ஆம் கல்வியாண்டில் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட இடப்பங்கீடு என்பது முதுநிலை பட்டப் படிப்பு அரசு ஒதுக்கீடு 407 இடங்கள், தனியார் ஒதுக்கீடு 385 இடங்கள், முதுநிலை பல் மருத்துவப் பட்டப்படிப்பு அரசு 139 இடங்கள், தனியார் 157 இடங்கள் உள்ளன.