சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலகப் பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 75 நாள்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தலைமைச் செயலகத்திலுள்ள 6 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநில கல்லூரியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் CRRI பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டணத்தை ரூ.5.20 லட்சத்திலிருந்து 30 ஆயிரமாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் வெளிநாடுகளில் பயின்ற மாணவர்கள் பயிற்சி மருத்துவம் மேற்கொள்வதற்கான இடங்கள் ஆயிரத்து 881ஆக உயர்த்திக்கொள்ள தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கெனவே பயிற்சி பெற விண்ணப்பத்த 521 பேருக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சி பெற வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் மருத்துவக்கல்லூரி இயக்குநரை அணுக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் குரங்கம்மைக்கான பரிசோதனை மையம் திறப்பு!