சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த உடல்நிலை சரியில்லாத மாணவனை அவரது தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுக் குழாய் வழியாக மருந்து செலுத்த அறிவுறுத்தப்பட்டதாக கூறுகின்றனர். இதற்காக, மாணவனின் மூக்கு வழியாக 'டீ கப்' மூலம் மருந்தினை செலுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்” பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியிட்டு விடியா திமுக-வின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இன்றைய நாளிதழ்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளில் அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களைக் கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர் காக்கும் பிராண வாயு உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைவின்றி கிடைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் உடல் நலன் காப்பதில் அரசியல் செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்து விடாமல், அடிப்படை தேவையான இந்த சிறப்பு முகாம்களையும் உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட இந்த விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.