சென்னை:சென்னையில், நேற்று (ஜூன் 15) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சென்னை ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், நேற்று ஆஞ்சியோ செய்து அவருக்கு இருதயத்திற்குச் செல்லும் 3 ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அவரின் மனைவி மேகலா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை என்ற தகவல் பொய்யானது.
நேற்று 20 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இன்றும் அறுவை சிகிச்சைகள் தடை இன்றி நடைபெற்று வருகிறது. அங்கு யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படாமல் இல்லை. அரசு மருத்துவமனையில் எந்தக் குறையாக இருந்தாலும், 24 மணி நேரமும் தொடர்பு கொண்டால் அதனை சரி செய்ய தயராக இருக்கிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தி அறிந்து காலையில் 2 மணிக்கு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அவர் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவர் இதுவரை அதுபோல் துடிதுடித்துக் கொண்டு இருந்ததை பார்த்தது கிடையாது. ஓமந்தூரார் மருத்துமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனா்.
காலை 9 மணிக்கு இருதவியல் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, பெரிய அளவில் அடைப்பு இருப்பதாக தெரிவித்து, ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. அதில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும், 90 சதவீதம் அடைப்பு இருக்கிறது எனவும் தெரிவித்தனர்.