சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் “நம்மை காக்கும் 48” என்ற திட்டத்தின் இரண்டு லட்சமாவது பயனாளியைச் சந்திக்கும் நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் 48 என்ற மகத்தான திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சாலை விபத்திற்குள்ளாகும் நபர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால், அவர்களுக்கு 48 மணி நேரத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும். இத்திட்டமானது தமிழ்நாடு முழுவதும் 236 தனியார் மருத்துவமனைகள், 455 அரசு மருத்துவமனைகள் என 691 மருத்துவமனைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கு விபத்து நேர்ந்தாலும் மனித நேயத்துடன் அவருடைய உயிரைக் காப்பாற்றும் மகத்தான திட்டமாக இத்திட்டம் உள்ளது. திட்டமானது துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், முதல் பயனாளியை முதலமைச்சர் சந்தித்தார். அதன்பின், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் ஒன்றரை லட்சமாவது பயனாளியை பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனையில் பார்த்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் வரை விபத்துக்குள்ளானவர்களை மீட்பது என்பது ஒரு கடினமான காரியமாக இருந்தது. காரணம், காவல் துறையினரின் விசாரணை, நீதிமன்றங்களின் நீண்ட நெடிய படிக்கட்டுகளை ஏறி இறங்க வேண்டி இருக்கும் என பல்வேறு சங்கடங்களாக இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விபத்துக்குள்ளானவர்களை உடனடியாகக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுடைய சேவையைப் பாராட்டி ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்த திட்டம் துவங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்றைக்கு (நவ.28) 2 லட்சமாவது பயனாளி குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நடந்த விபத்து, நேற்று நடந்த விபத்து என்று விபத்துக்களில் சிக்கிய ஏழு பேர் இங்கே தற்சமயம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 லட்சமாவது பயனாளி யார் என்றால், ஒரு கல்லூரி மாணவர். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதால், அவருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாணவரை நானும், நம்முடைய துறைச் செயலாளரும், மருத்துவமனைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்தோம். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டோம். அந்த மாணவனின் பெயர் ஐசக்ராஜ் (21). சிங்கப்பெருமாள் கோயில் அருகே நேற்றைய முன்தினம் (நவ.27) மாலை நடந்த விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், இன்னொரு மாணவரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்டெக் படித்து வருகிறார். அவருக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி, இதுவரை 2 லட்சம் பயனாளிகளைக் கடந்துள்ளது தமிழக அரசு இதுவரை உதவித்தொகையாக ரூபாய் ஒரு கோடியே 77 லட்சம் செலவில், 2 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இந்த “இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48” திட்டம் மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானங்கள், உடலுக்கு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் செயல்படுகின்ற முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலுமான மிகப்பெரிய திட்டம். இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது, கடந்த 2009ஆம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த திட்டத்தை பொறுத்தவரை, இதுவரை ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் இந்த காப்பீடு திட்டத்திற்கான பலனைப் பெற்று இருக்கிறார்கள். இதன் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
தமிழக அரசைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் இதற்காக யுனைடெட் இந்தியா கார்ப்ரேட் நிறுவனத்திற்கு ரூ.546 கோடி ரூபாயை ஆண்டுக்கு செலுத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின்படி ரூ.730 கோடி செலவு என்கின்ற வகையில், இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, 1,829 மருத்துவமனைகளில் இந்த காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டம் வெகு சிறப்பாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த 15 திட்டம் இன்னமும் கூடுதலாக, புதிய பிரிமியங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக திருமணமானவர்கள் குடும்பத் தலைவர்களாக ஆகின்ற நிலையில், புதிய குடும்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது.