சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் பேருந்து, செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மருந்து பொருட்கள் ஆகியவற்றை கரோனா நிவாரணமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றது. இந்திய செஞ்சிலுவை சங்கம் ரூ.2.5 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. ஆக்ஸிஜன் வசதி கொண்ட 3 பேருந்துகளை அடையார் இன்னர் வீல் சங்கம் வழங்கியுள்ளது.
இன்று (மே.18) காலை திண்டிவனத்தில் மருத்துவர் ராமனுக்கு போலியான ரெம்டெசிவிர் மருந்தை அளித்ததால் உயிரிழந்தார் எனப் புகார் அளிக்கப்பட்டது. ஆய்வு மேற்கொண்டதில் அவருக்கு வழங்கப்பட்ட மருந்து போலி என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருந்து வழங்கப்பட்ட திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் தற்போது ஆய்வு மேற்கொண்டதில் கரோனா சிகிச்சையை சரியாக மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.