புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியை தூய்மை இந்தியா திட்டத்தில் முதன்மை மாநகராட்சியாக மாற்ற, 'நம்ம ஆவடி' என்னும் வாசகத்துடன் பொது மக்களுடனும், கல்லூரி மாணவர்களுடனும் இணைந்து தூய்மைப் பணிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஈடுபட்டார். அப்போது அவர் பயன்பாடு இல்லாத இடங்களில் உள்ள புதர்களையும் குப்பைகளையும் அகற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், 'டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற செயல்கள் நடைபெற்றுள்ளதா என ஆய்வு செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
மேலும் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய அமைச்சர் 'இதுபோன்ற பதற்றமான சூழலை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனவும் குறிப்பிட்டார்.
அதேபோல், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு, '5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே தேர்வுகள் நடைபெற்றுதான் வருகிறது' எனக் கூறிய அமைச்சர், 'கல்வியின் தரத்தினை உயர்த்தவே ஒரே தேர்வு நடத்தப்படஉள்ளது' என்றார். மேலும் 'இது ரேங்க் முறையை மாற்றி மாணவர்களின் தோல்வி பயத்தை மாற்றியுள்ளது' எனவும் பாண்டியராஜன் விவரித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் மைல் கல்லாக அமையும் என தெரிவித்த அவர் கல்வி துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் வழக்கம்போல கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பாக தான் சார்ந்த தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இம்முறை உலக தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்ற நிகழ்வும் செய்தியாளர் சந்திப்பும் இதையும் படிங்க: ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு இங்கு இடமில்லை’ - அமைச்சர் துரைக்கண்ணு