சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்ய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், துணைவேந்தர் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க அரசு ஆளுநருடன் இணக்கம்காட்டி வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2022-2023ஆம் ஆண்டிற்கான இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், பணி நியமன ஆணை, மருத்துவ உபகரணங்களை வழங்கி பேசும்போது, ''அரசுப் பள்ளிகளில் படித்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்பில் 465 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 117 பல் மருத்துவ மாணவர்கள் என மொத்தம் 582 பேருக்கு வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் 10 மாணவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கையடக்க கணினி மருத்துவக்கல்லூரி முதல்வர் மூலம் தரப்படும். அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் படிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. நான் அரசுப் பள்ளியில் படித்து தான் இங்கே வந்து உள்ளேன். சவாலில் வென்று வந்து உள்ள நீங்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தான் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாகி உள்ளனர். அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஆட்சியில் விடுதி, கல்லூரி கட்டணத்தை திமுக கட்டும் என்று தற்போதைய முதலமைச்சர் அப்போது அறிவித்தார். அதன் பின்னர் தான் அரசு அறிவித்தது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கையடக்க கணினியை முதலமைச்சர் கடந்த ஆண்டு வழங்கினார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் மக்கள் அதிகம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்” எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை முதலமைச்சர் அடுத்தவாரம் தொடங்கி வைக்கிறார். தமிழக முதலமைச்சர் 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரத்து 18 கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.