சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் நான்காவது நாளான இன்று (ஏப்ரல்.11) உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறை அமைச்சர்கள் பதிலுரை நிகழ்த்துகின்றனர்.
இதனிடையே, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ராயபுரம் தொகுதி உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எம்.சி சாலை பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ''ராயபுரம் தொகுதி, எம்.சி.சாலையில் மணல் இல்லாத காரணத்தினால் அடுக்குமாடி வசதி கொண்ட வாகனம் நிறுத்துமிடம் அமைக்க முடியாமல் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இதற்கு ஐட்ரீம்ஸ் மூர்த்தி விளக்கம் கூறுகையில், "எம்.சி.சாலை மற்றும் அதனைச்சுற்றி அனைத்து தெருக்களும் இந்திய அளவில் புகழ்மிக்க ஜவுளி வணிகம் நடைபெறும் இடம். இங்கு 1 லட்சம் பேர் தினம்தோறும் வருவார்கள். வாகன நிறுத்த வசதிகள் இல்லை. அங்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம் தேவை உள்ளது" என்றார்.
பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் எங்கெல்லாம் வருகிறது - அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்பு அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நேரு, "தியாகராய நகரில் அகலமான நடைபாதை வசதிகள் இருப்பதுபோல் எம்.சி.சாலை-யிலும் அமைக்க இருக்கிறோம். அண்ணா பார்க் அருகில் பன்னடுக்கு வாகனம் நிறுத்த வசதிகள் ஏற்பட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. செமிட்ரி ரோடு சாலையில் வாகன நிறுத்தம், வண்ணாரப்பேட்டை மெட்ரோ-வில் பிரத்யேகமாக வாகனம் நிறுத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அதனைத்தொடர்ந்து, ஐட்ரீம்ஸ் மூர்த்தி பேசுகையில், ராபின்சன் பூங்கா - எம்.சி.ரோடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிங்கார சென்னை 2.0 வழியாக 24 கோடி திட்டம் மதிப்பீட்டில் செய்ய முடிவு செய்தனர். அதன்பிறகு நவம்பர் மழை-யில் மேலும் 4 கோடி கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்றும்; அதனால் பணிகள் நடைபெறுவது கடினம் என்றும்; மேலும், ராபின்சன் பூங்கா - எம்.சி.ரோடு இணைத்து பன்னடுக்கு அடுக்குமாடி கட்டடம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் கே.என். நேரு, 'ராபின்சன் பூங்கா-வில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்துச் செயல்படுத்தப்படும்' எனத்தெரிவித்தார். மேலும், இது தொடர்பான துணை கேள்வி கேட்ட காஞ்சிபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், "காஞ்சிபுரத்தில் அதிக அளவில் தொழில்கள் நடக்கின்றன. தேரோடும் வீதி என்பதால் நெருக்கடி அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும்'' என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நேரு, ''அனைத்து வளர்ச்சி பெற்ற நகரங்களிலும் வாகன நிறுத்தம் அவசியமானது. காஞ்சிபுரத்தில் இடம் இருக்குமானால் வாகன நிறுத்தும் இடம் அமைக்க முதலமைச்சர் உடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக பேசிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பன்னடுக்கு வாகன - கட்டடம் கட்ட செலவு அதிகம். இரும்பு கொண்டு கட்டினால் செலவு குறைவு - அப்போலோ போன்ற மருத்துவமனைகள் அதைச் செய்துள்ளன என ஆலோசனைக் கூறினார்.
அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ''ஏற்கெனவே சென்னை தியாகராயநகரில் 2+6 கட்டடம் உள்ளது. இரும்பினால் செய்யும் பணி சேலத்தில் நடக்கிறது. நகராட்சி சொந்தமான இடம் என்றால் உடனடியாக அங்கு வாகன நிறுத்தம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழிசைக்கு திமுக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு