சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மெட்ரோ ரயில், மின்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (செப்.20) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கே.என்.நேரு அதிகாரிகள் உடன் பேசும்போது, "நேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களுடனான வெள்ளத்தடுப்பு மேலாண்மை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை வாரியான அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். மேலும், ஒவ்வொரு துறைகளிலும் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகின்றன எனக் கேட்டறிந்து, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து, சாலை வெட்டுக்கள் மற்றும் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீர்செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
முதலமைச்சரின் அறிவுரையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தரமாகவும், மக்களுக்கு இடையூறின்றியும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக விரைந்து முடித்திட வேண்டும். சாலைகளில் இதரப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வெட்டுக்களை உடனடியாக சீர் செய்திட வேண்டும்.