சென்னை:உலகின் மிகவும் நீளமான இரண்டாவது பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்ற மெரினாவில் கடலின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில், ரூ.1.14 கோடி செலவில் அமைக்கப்பட்ட 'மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை' இன்று (நவ.27) திறக்கப்பட்டது. ஒவ்வொரும் ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை ரசிக்கும் வகையில், மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வந்தது. அதன்பின் பெருநகர சென்னை மாநகராட்சியின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு 3 அடி அகலம், 263 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதையை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அவருடந் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தயாநிதி மாறன் எம்பி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உலக அளவில் 25 கடற்கரைகளில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் எளிதாக வீல்சேர் வசதியுடன் கடற்கரையை அணுகும் சூழல் உள்ளது. இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.