சென்னை:வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளான முகலிவாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார்.
மழை நீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். மேலும், தண்ணீர் வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தி கால்வாய் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் தற்போது இந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. மோட்டார்கள் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒரு நாளில் தண்ணீர் முழுவதும் வடிந்து இயல்புநிலை திரும்பும்.
போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற 120 கோடி மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 40% பணிகள் நடைபெற்று முடிந்ததுள்ளது. அந்த பணிகள் முடிவடையும் பட்சத்தில் வருங்காலத்தில் இந்த பகுதிகளில் மழைநீர் மற்றும் உபரிநீர் புகுவது தவிர்க்கப்படும்.