சென்னை: தீவுத்திடல் எதிரே சத்தியவாணி முத்து நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நேற்று (நவ.9) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, " மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 2 லட்சம் உணவு பொட்டலங்கள் ஒரு வேளைக்கு வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்களில் இலவச உணவு என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் மழை நீர் வடிகாலுக்காக எந்த பணிகளையும் மேற்கொள்ளாததே மழை நீர் தேங்க காரணம்.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மழைநீர் தேங்காது
திமுக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் 2700 கி.மீ கால்வாயில் 700 கி.மீக்கு மேல் தூர் வாரியுள்ளோம். அதன் காரணமாக தான் இந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது. வடிகால் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தும் போது மாம்பலம் கால்வாயை அடைத்துள்ளனர், அதனால் தான் மழை நீர் தேங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 90% பணிகள் கடந்த ஆட்சியிலேயே முடித்துவிட்டனர். அதில் தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்தியவாணி முத்து நகரில், குடிசைப்பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதில், 2 ஆயிரம் பேருக்கு சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கத்தில் புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வீடு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு!