சென்னை:தமிழ்நாட்டில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிகக் கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.5) வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று (ஜன.5) தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஜன.06) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜன.07) தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.