சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய வானிலை ஆய்வு மையம், நவம்பர் 18 வெளியிட்ட அறிவிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்றும், பின்னர் இது அடுத்த மூன்று நாட்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 19ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நவம்பர் 20ஆம் தேதி சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நவம்பர் 21ஆம் தேதி சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும், நவம்பர் 22ஆம் தேதி சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராபள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவித்திருந்தது.