அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர் சந்திப்பு சென்னை:ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள், மூன்று துணை ஆட்சியர்கள், மூன்று வட்டாட்சியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் ரயிலின் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த பயங்கர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 261 பேர் வரை உயிரிழந்ததாக தென்கிழக்கு ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் படுகாயம் அடைந்த 900க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த கோர விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், வருவாய்த்துறை செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர மற்றும் செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'நேற்று நடந்த ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 261 பேர் இறந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:Coromandel Express: உயிரிழப்பு எண்ணிக்கை 238 ஆக உயர்வு - மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு
மேலும், அந்த மாநில மொழி தெரிந்த அரசு அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் யார், அவர்கள் எத்தனை பேர் என்பதும் தெரிய வரும் என்றார். இந்த நிலையில், இரண்டு நாட்கள் இங்கேயே இருந்து இதற்கானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
127 பேருடன் பேசியுள்ளோம்: இந்த பயங்கர விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 8 பேர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உள்ளதாகவும், இதுவரையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 127 நபர்களை தொடர்பு கொண்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐந்து பேரை தொடர்பு கொண்டு உள்ளோம். தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மீட்புப் பணிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் நடக்கவிருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா உள்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாகவும், இன்று ஒரு நாள் துக்க நாள் அனுசரிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, ஒடிசா மாநிலத்திலும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் படநாயக் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒடிசா ரயில் விபத்து - உலகத் தலைவர்கள் இரங்கல்