சென்னை: எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீட்பு நடவடிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் சென்னை அருகே தற்போது கரையை கடந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:
* செங்குன்றத்திலிருந்து 3,218 கன அடியும்,
* சோழவரம் ஏரியிலிருந்து 2015 கன அடியும்,
* செம்பரம்பாக்கத்திலிருந்து 2,151 கன அடியும்,
* பூண்டியிலிருந்து 10,000 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
ஆந்திர மாநில பிச்சாட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள 11,000 கன அடி ஆரணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதை தொடர்ந்து கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி போன்ற ஆரணியாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமும், மாவட்ட நிர்வாகம் மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மணிமங்கலம் சாலை முதல் தர்காஸ் சாலை வரை உள்ள அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், அமுதம் நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை Common Alert Portocol மூலம் 9,696 நபர்களது அலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து மீன்பிடி படகுகளும், வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 45 படகுகள் தேவையான பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சி பகுதியில் மீட்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் இடங்களுக்கு கூடுதலாக படகுகள் அனுப்பும் வகையில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்கள்