சென்னை:கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல வலுப்பெற்று, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்நிலையில் இன்று (டிச.03) காலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கக் கடலில் 300 கிலோ மீட்டர் புதுச்சேரிக்குத் தென்கிழக்கிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று டிசம்பர் 4ஆம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பகுதிகளியை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் சென்று மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, தெற்கு ஆந்திராவிலுள்ள கடற்கரைக்கு நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் ஒரு புயலாகக் கரையைக் கடக்கும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் சின்னம் காரணமாக கனமழை முதல் மிகக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகளின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளிலிருந்து பொதுமக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 இதர நிவாரண முகாம்களும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- புயலின் காரணமாக, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
- புயலின் காரணமாக 118 இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- மீனவர்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்கியதன் காரணமாக, கிழக்கு கரையிலிருந்த 930 படகுகள் பாதுகாப்பாகக் கரை சேர்ந்துள்ளன. மேலும், 57 படகுகள் கிருஷ்ணாம்பட்டினம், ஜூவாலதின் மற்றும் ராமய்யாபட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 403 படகுகள் மேற்கு கரையில் பாதுகாப்பாக உள்ளன.
- தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
- மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரக்கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.
- புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், ட்விட்டர் (Twitter), முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 1 நிவாரண முகாமில் சுமார் 348 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 714 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை நெருங்கும் மிக்ஜாம் புயல்... எப்போது கரையைக் கடக்கும்?