கரோனா பரவலின் தாக்கம் காரணமாக வணிகத்தில் ஈடுபடுவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டப்படி, வணிகர்கள் பல்வேறு கணக்குகளை உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நிலுவைத் தொகைகள், வெளியிடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சரக்குகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது, கூடுதல் வரிப்பணத்தை மீண்டும் கேட்பதற்கு விண்ணப்பிப்பது, மேல்முறையீடு விண்ணப்பம் உள்பட பல நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில், இவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான தளர்வுக்கு ஏதுவாக, தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தை திருத்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார்.
தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் (வாட்), தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச்சட்டம், ஆடம்பர வரிச்சட்டம் மற்றும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு மற்றும் தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டத்தின் காலக்கெடு தொடர்பான விதிகளை தளர்த்துவதற்கான திருத்தத்தை ஏற்படுத்தும் அவசர சட்டத்தையும் ஆளுநர் பிறப்பித்தார்.