சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 25 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.
- வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் நான்கு ஆதி திராவிட மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டிடங்கள் கட்டப்படும்.
- மேலும் விடுதிகளில் ஏற்படும் சிறு பராமரிப்பு பழுது பார்ப்பு மற்றும் மாணாக்களின் எதிர்பாரா மருத்துவ செலவினம் ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை மாவட்டத்தில் உள்ள 23 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டம் ரூ.3.75 கோடி செலவில் செயல் படுத்தப்படும்.
- விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பயோமெட்ரிக் வருகை பதிவு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
- கல்லூரி விடுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் கற்பித்தல் அறை சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 கோடி செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும், ஆகையால் இதன் மூலம் 23,112 மாணவர்கள் பயன்பெறுவர்கள்.
- சென்னை சமூகப் பணி கல்லூரியில் (Madras School of Social Work) ரூ.2 கோடி மதிப்பில் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் நிறுவப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும்.
- அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் சுமார் 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அவர்களது பாடத்திட்டத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி காலங்களுக்கான (Internship) உதவி மற்றும் உதவித்தொகை ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள 37 வகையான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு இனவரவியல் ஆய்வு ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் இணையதள இணைப்பு வசதி (Long Range Wireless Internet Connectivity) சுமார் ரூ.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்க திட்ட கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
- சுமார் 500-க்கும் அதிகமான பழங்குடியினர் வசிக்கக்கூடிய கிராமங்களில் 50 பழங்குடியின கிராமங்களை தேர்வு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மற்றும் வனத்துறை ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த திட்டங்களின் பங்களிப்புடன் நவீன கிராமங்களாக உருவாக்கப்படும்.
- பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- வீடற்ற 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடி செலவில் வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடெற்ற ஆயிரம் பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.
- தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு திட்டத்தின் வீடுகள் தூய்மை பணியாளர் நல வாரியம் மானியத்துடன் ரூ.55 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்.
- மாணாக்கர் விடுதிகளில் மாணவர்களின் சமூக திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஆர்வங்களை கண்டறிந்து அதன் வாயிலாக தன்னம்பிக்கையை வளர்க்கவும், இசை மற்றும் கவின் மன்றங்கள், வாசித்தல் மன்றங்கள் புகைப்பட கலை மன்றங்கள், சுற்றுச்சூழல் மன்றங்கள், சதுரங்க விவாதம் நாடகம், இசை தகவல் தொழில்நுட்பம் போன்ற புத்துணர்வழிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் மன்றங்கள் உருவாக்கப்படும்.
- வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவி திட்டம் 2 திட்டக் கூறுகளாக திருப்தி அமைக்கப்படும் ( திட்டமொன்றில் ₹8 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் உச்சவரம்பு உள்ள மாணவர்களுக்கு படிப்பின் அடிப்படையில் ஆண்டிற்கு ரூ.36 லட்சத்திற்கு நிகாமலும், திட்டம் இரண்டில் ரூ.8 லட்சத்திற்கும் மேல் 12 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் உச்ச வரம்புள்ள மாணாக்கருக்கு ரூ.24 லட்சத்திற்கு மிகாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- நகர்ப்புற பகுதிகளில் பணிபுரியும் மகளிர் தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்யும் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழ்நாடு பணி புரியும் மகளிருக்கான விடுதி நிறுவனத்துடன் இணைந்து துறையின் விடுதிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கருக்கு உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவு தேர்விற்கான பயிற்சிகள் சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும்.
- விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கான திறன் மேம்பாடு சுயதொழில் தொடங்குவதற்கான குறுகிய நீண்ட காலப் பயிற்சி தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு திட்டம் உலகளாவிய திறன் பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
- மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், முன்னேற்றத்திற்கான அடிப்படை வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ளவும், தற்போது தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வரும் ரூ.2.50 லட்சம் மானிய தொகை ரூ.6 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிரின் வாழ்க்கை தரம் மேன்மையடையும் வகையில், மகளிர் உறுப்பினர்களாக கொண்ட பால் உற்பத்தியாளர், கூட்டுறவு சங்கங்கள் புதிதாக உருவாக்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நவீனப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 5000 மகளிர் பயனடையும் வகையில் ரூ.1.25 கோடி மானியம் வழங்கப்படும்.
- தாட்கோ மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட உதவிடும் பொருட்டு தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.