இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள கன்டண அறிக்கையில், "தமிழ்நாட்டின் அத்தியாயத்தில் புதிய மைல் கல்லாக, டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்து, விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய, தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பல்வேறு நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குடிமராமத்துத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள பல்வேறு நதிகளின் கட்டமைப்புக்களை சீரமைத்தல் போன்ற பல திட்டங்களை, விவசாய பெருங்குடி மக்களின் தேவைகளை முழுமையாக உணர்ந்து, முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவேரி நதிநீர் பிரச்னைக்கு சட்டப்போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டவர் முதலமைச்சர். எந்தப் பிரச்னைகளுக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்காமல், அரசின் மீது ஏதாவது குறை கூறிக் கொண்டிருப்பதையே தனது வழக்கமான பணியாக வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது டெல்டா மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் குறித்து அரசின் மீது குறைகளை கூறுவது ஒன்றும் புதிதல்ல.
கடந்த ஆண்டு (2019-2020) டெல்டா மாவட்டங்களில் 60.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 281 பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்ட காரணத்தினால் மேட்டூர் அணை திறக்கப்பட்டவுடன், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் வழக்கத்தைவிட விரைவாக சென்றடைந்தது. மேலும், பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களையும் திறம்பட செய்ததன் காரணமாகவே, கடந்த ஆண்டு 7 லட்சம் ஏக்கர் நிலங்களில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டது.
இதனைப் பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர் வாரப்படுமா என்று கேள்வி எழுப்புவது விந்தையாக உள்ளது.
நீர் மேலாண்மைக்கு மக்கள் பங்களிப்பு அத்தியாவசியமானது என்பதை உணர்ந்த முதலமைச்சர், 2017ஆம் ஆண்டு குடிமராமத்து என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2016-2017 மற்றும் 2017-2018ஆம் ஆண்டுகளில் 3036 குடிமராமத்து பணிகள் ரூ. 430.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. 2019-2020ஆம் ஆண்டில் ரூ.499.69 கோடி மதிப்பீட்டில், 1829 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.