தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், அரசு மீது எதிகர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்காத வகையில் ஊரடங்கு காலம் முழுவதும் உணவு பொருள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விலையின்றி வழங்கப்படுகிறது. 65 நாள்களாக மக்களின் அத்தியாவசிய உணவு தேவைகளை அரசு அனைத்து வகையிலும் பூர்த்தி செய்துள்ளது.
மார்ச் 23 ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, அன்றே 1000 ரூபாய் ரொக்கம், ஏப்ரல் மாதத்திற்கு தேவையான இலவச ரேஷன் பொருள்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதிவ் 99% பேருக்கு நிவாரணத் தொகையும், 98% பேருக்கு உணவு பொருள்களும் விநியோகிக்கப்பட்டுவிட்டது. தடைசெய்யப்பட்ட 845 பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. 2 லட்சத்து 93 ஆயிரம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்த 71 ஆயிரத்து 61 பேருக்கும் இலவச பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சமூக சமையல் கூடங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், திருநங்கைகள், முடி திருத்தும் தொழில் செய்வோர் ஆகியோருக்கு நிவாரணத் தொகையும், இலவச பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டில் உணவு பிரச்னையே இல்லாத ஒரு நிலையை அரசு உருவாக்கி உள்ளது.