கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த அவர் வீட்டிற்கு திரும்பவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ’அமைச்சர் காமராஜ் கரோனா தொற்றினால் ஜனவரி மாதம் 4ஆம் தேதி பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் 11ஆம் தேதி வரை சிகிச்சை மேற்கொண்டார்.
அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து எம்ஜிஎம் மருத்துவர்கள் குணமடைய செய்துள்ளனர்.
அமைச்சர் காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளார். தற்போது முழு நலமுடன் உள்ள அமைச்சர் காமராஜ், இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வீட்டிற்கு செல்ல உள்ளார். மூன்று வாரங்கள் கழித்து அவர் மக்கள் பணியில் ஈடுபடுவார். கரோனா தொற்றினால் 95 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. இவரின் சிகிச்சை ஒரு அனுபவப் பாடமாக அமைந்துள்ளது.