சென்னையை அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பினை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் வழங்கினார்.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட திமுக கட்சியிலிருந்து விலகிய 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சரை மாற்றுவதோ அலுவலர்களை மாற்றுவதோ என்பது முதலமைச்சர் முடிவு. அரசு அலுவர்களும், அமைச்சர்களும் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுடன் இணைந்து கரோனா பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 54 துறைகளும் முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளதுபோல் சுகாதாரத் துறை மட்டுமின்றி எந்தத் துறையிலும் உள்ள பணிகளில்கூட அவரால் வழிகாட்ட முடியும். தற்போது அமைச்சர் மாற்றத்திற்கான அவசியம் இல்லை.