'நதிநீர்ப் பங்கீடு குறித்து வழக்குகளில் அரசுக்கு ஆர்வமில்லை' என குற்றஞ்சாட்டிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
- 'தமிழ்நாட்டில் திமுக ஆட்சியிலிருந்தபோது பல காலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அரசு நதிநீர்ப் பங்கீட்டு உரிமைகளில் அக்கறை காட்டுவதில்லை என்று குறை கூறியுள்ளது விந்தையாக உள்ளது.
- நதிநீர்ப் பிரச்னைகளில் திமுகவின் துரோகங்களை நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.
- உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாகப் படிக்காமலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத்தும் கூறுவதையே துரைமுருகன் வாடிக்கையாகக் கொண்டுள்ளதை மக்கள் நன்கறிவர்.
- காவிரி நதிநீர்ப் பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன், உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறிவருகிறார்.
- காவிரி நதி நீர்ப் பிரச்னை ஆகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகட்டும், திமுக ஆட்சி காலத்தில் எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
- பங்கீடு குறித்து அவரது அனுபவத்தைக் கொண்டு தனது அறிக்கையில் அது பற்றி தெரிவித்துள்ளார். தனது பங்கீடு அனுபவத்தை வேலூர் மக்களவைத் தேர்தலில் செயல்படுத்தியதால் தான், வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதும் இந்த நாட்டிற்கே தெரியும்.
- அதிமுக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் தொடர்ந்து செயல்படும். பெண்ணையாறு நதிநீர்ப் பிரச்னையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனுக்கு பதில் கூறியுள்ளார்.