சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஊழல் குறித்து பேசியுள்ளார். நாட்டில் யார் எதைப் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. சாத்தான் வேதம் ஓதுவது போல் அதிமுக மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் மரபை மீறியதால் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
திமுக ஊழலின் மொத்த உருவம் - அமைச்சர் ஜெயக்குமார் - jeyakumar
சென்னை: நாட்டில் யார் எதை பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது என்று ஊழல் பற்றி பேசிய எம்.பி தயாநிதி மாறனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இவர் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும், இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், அதிமுக ஊழல் கட்சி என நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இதைக் கூறும் முன்பு அவர் நாடாளுமன்றத் தேர்தலில் பணத்துக்காக எந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே உத்தமர்கள் போல் இவர்கள் பேசுவதை நாட்டு மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். ஆகவே ஊழலின் மொத்த உருவமாக திமுக உள்ளது.
மேலும் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. சசிகலா-தினகரன் குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் யார் வந்தாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் சேர்த்துக் கொள்வார்கள் என்றார்.