மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், இன்று மாலை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் யாரும் உள் இடஒதுக்கீடு குறித்து கோரிக்கைவைக்கவில்லை. முதலமைச்சர்தான் முடிவுசெய்து அமல்படுத்தினார். மாநில அரசு அதிகாரத்தின்படியே நேற்று உள் இடஒதுக்கீடு பற்றிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில்தான் மருத்துவப் படிப்பில் அதிக சேர்க்கை இடங்கள் கிடைத்தன. கடந்த ஒன்பது ஆண்டில் மூன்றாயிரத்து 50 மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஆட்சியில் ஆயிரத்து 940 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 300 மருத்துவ இடங்கள்தான் உருவாக்கப்பட்டன.
உயர் கல்வியில் அதிக சேர்க்கை விகிதம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இந்த ஆண்டே உள் ஒதுக்கீட்டின்படி மருத்துவச் சேர்க்கை தொடங்கும், அதற்கான நடவடிக்கையை சுகாதாரத் துறை தொடங்கும்.
கவுன்சிலிங் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த ஒதுக்கீட்டு விசயத்தில் திமுக எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது" என்றார்.
இதையும் படிங்க:'சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு'