சென்னை ராயபுரம் ஆடுதொட்டியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கினார். சிகா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "சிகா அமைப்பு சிறப்பான முறையில் மக்களிடம் கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வை செய்து வருகின்றனர். நான் பேரவை தலைவராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. அதில் குதர்க்கமாக கேள்வி கேட்பது நியாயமில்லை. சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். அதிமுக எப்போதும் பலமிக்க இயக்கமாகத்தான் இருக்கிறது.
கூட்டணி கட்சிகளின் கருத்துகளால் அதிமுக பலமில்லாமல் இருக்கும் என்பதை ஏற்கமுடியாது. மதநல்லிணக்கம் என்பது அதிமுக கட்சியின் கோட்பாடாகும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, கூட்டணியில் போட்டியிடுவதா என்பது உயர்மட்ட குழு முடிவெடுக்க வேண்டியது. தேர்தல் நேரத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சியாக இருப்பதால் தேர்தலின் போது கட்டாயம் கூட்டணி அமையும்" என்றார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவையாகும் கலைவாணர் அரங்கம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!