கடலோரங்களில் மீன் வளத்தைப் பெருக்க செயற்கையாக அமைக்கப்பட்ட பவளப்பாறைகளை கடலில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று தொடங்கிவைத்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆழ்கடலில் மீன் வரத்து அதிகம் உள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பவளப்பாறைகள் நிறுவும் திட்டத்தைத் தொடங்க உள்ளோம்.
மீனவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்கேற்ப கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பவளப் பாறைகள் அமைப்பது மூலம் மீன்களின் வரத்து பெருகி 35 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
திமுக குடும்ப ராஜ்யத்தால் செயல்படுவது, அக்கட்சியின் தொண்டர்களின் குமுறல்களால் இன்று வெளிஉலகிற்கு தெரியவந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கு.க. செல்வம் போன்று பல எம்எல்ஏக்கள் திமுகவிலிருந்து வெளியேறுவார்கள்” என்றார்.
அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியிலிருந்து அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும் என்று எஸ்.வி. சேகர் கூறியிருந்தார். இதுதொடர்பாகப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அவர் மானம் ரோஷம் உள்ளவராக இருந்தால் அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட அதிமுக கொடியில் நின்று வெற்றிபெற்று 5 வருடம் எம்எல்ஏவாக அவர் பெற்ற சம்பளத்தையும், தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் ஓய்வூதியத்தையும் அவர் திருப்பிக் கொடுக்க தயார? விளம்பரத்திற்காக அவர் பேசும் பேச்சு மக்கள் மனதில் எடுபடாது” என்றார்.
இதையும் படிங்க:'இந்த மந்திரத்தை ஒலிக்க விடுங்க... கரோனா ஓடிவிடும்' - எஸ்.வி. சேகர்