சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மந்தைவெளி அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேசைப் பந்தாட்ட உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதற்காக மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். திமுகதான் ஒற்றைக் குடும்பத்தின் கீழ் உள்ளது. இந்த தேர்தலிலும் தோல்வியுற்றால் திமுகவிற்கு இதுதான் கடைசி தேர்தல்.
மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை பெற்றுத் தருகிறோம். இது பொறுக்காமல் தான் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. பட்ஜெட்டை மாய லாலி பாப் என ஒப்பிட்டு ஸ்டாலின் விமர்சித்திருப்பது அரசியல் முதிர்ச்சியா? அரசியலில் லாலிபாப் பேபி ஸ்டாலின் தான்.
மத்திய பாஜக ஆட்சியில் இருந்தபோது பதவியைப் பெற்று முழுமையாக அனுபவித்தது திமுக தான். ஊழல் பெருச்சாளிகளான திமுக புது அவதாரத்தோடு தமிழ்நாட்டில் நுழைய இருக்கின்றனர் என்பது மக்களுக்கு நன்றாக புரியும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையை கலக்கும் சசிகலா ஆதரவு சுவரொட்டிகள்!