சென்னை ராயப்பேட்டை பகுதியில் கரோனா மருத்துவ முகாமை தொடங்கிவைத்த, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் அதிக அளவில் ஒரு நாளைக்கு 12 பேருக்கு சென்னை மாநகரம் முழுவதும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளும் பகுதியாக சென்னை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் இல்லை.
சென்னையைப் போலவே, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறது. இந்த செயலில் ஈடுபடுவார்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.
பல்வேறு நிபுணர்களின் பரிந்துரையின் பெயரில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு அறிவித்திருப்பது அத்தியாவசியமானது.
அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.