மியான்மர் நாட்டில் ராயபுரம் மீனவர்கள் மீட்பு - அமைச்சர் ஜெயக்குமார் - சென்னை மீனவர்கள் மீட்பு
சென்னை: ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்று கரை திரும்பாத சென்னை மீனவர்கள், படகினை மியான்மர் நாட்டில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ஜூலை 23ஆம் தேதி சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 09 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்று ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று கரை திரும்ப வேண்டிய IND - TN - 02 - MM - 2029 என்ற பதிவெண் கொண்ட செவுள்வலை ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு கரை திரும்பாமல் இருந்தது.
மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல்படை, சென்னை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளைக் கொண்டு காணாமல்போன மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவுத் துறை வழியாக மியான்மர், வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளிலும் காணாமல்போன மீனவர்கள், படகினைத் தேடுவதற்கு வேண்டுகோள் விடுத்தது.
அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் பலனாக இன்று (செப்டம்பர் 14) அதிகாலை, காணாமல்போன 09 மீனவர்களும் மியான்மர் கடற்பகுதியில், மியான்மர் நாட்டுக் கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைத்து மீனவர்களும் நலமாக இருப்பதாகவும், அவர்களுக்கு போதுமான உணவு, இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக தகவல் பெறப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.