ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்ட போது அதனை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி 2017-18இல் மாநிலத்தில் உற்பத்தி ஆகும் பொருட்கள் பிற மாநிலங்களில் விற்கப்படும் போது அதில் கிடைக்கும் ஐ.ஜி.எஸ்.டி வரியானது, மேற்படி ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டியத் தொகையாக ரூ.4,073 கோடி கிடைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்குபேட்டியளித்துள்ளார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார், 'இத்தொகை மாநிலத்தின் முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. ஜி.எஸ்.டி கூட்டங்களில் தமிழ்நாடு முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் இத்தொகை வழங்கப்பட உள்ளது. அடுத்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான தொகை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம். 34 சரக்குகள் மற்றும் 11 சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 64 பொருட்களுக்கும் 8 சேவைகளுக்கும் வரி குறைப்புகள் தமிழ்நாட்டிற்குக் கேட்டுள்ளோம்.
ஒரு லட்சம் வரையிலான தொகைக்கான வர்த்தகத்தை மாநில அளவிலேயே செயல்படுத்த முடியும். அவை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்படாது. ஒன்றரை கோடி வரை வர்த்தகம் செய்பவர்களுக்கு 3 விழுக்காடு மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. பட்டர் பிஸ்கட், உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பவர்கள் 44 லட்சத்திற்குள் வர்த்தகம் செய்யும் போது அவர்கள் வரிகளுக்குள் வர மாட்டார்கள்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசுக்கு உள்நோக்கம் இல்லை. திமுகவினர்தான் சட்டத்தை வளைத்து, ஒடித்து பல வேளைகளை செய்வார்கள். நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித்தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். அதில் அரசு தலையிடாது.
காங்கிரஸை திமுகவினர் இதைவிட கேவலப்படுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் திமுக ஒரு வட்டத்திற்குள் இருக்கிறது, ரஜினி சொன்னதைப்போல். ஆனால் எங்கள் கட்சி சமுத்திரம் போன்றது. உடைந்த கண்ணாடி உடைந்தது தான். காங்கிரஸை திமுகவினர் இதைவிட கேவலப்படுத்த முடியாது. இருப்பினும் உடைந்த கண்ணாடியை ஒட்டவைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதிமுக பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மக்கள் விரும்பும் திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்தும்' என்றார். இதையும் படிங்க: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்பத் திட்டம்