இது குறித்து தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக அவரது உதவியாளர் விஜயரங்கன் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று (ஜூலை18) புகார் ஒன்றை அளித்தார். அதில், ”கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை வெளியான நக்கீரன் வார பத்திரிகையில், ஆந்திராவில் தமிழ்நாடு அமைச்சர்கள் முதலீடு செய்துள்ளதாக செய்தி வெளியானது. அந்த செய்தியில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆந்திராவில் மீன் ஏற்றுமதி- இறக்குமதி செய்யும் ஜோசப் ஜெகன் என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும், தனது பதவியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் அமைச்சர் ஜெயக்குமார் முதலீடு செய்துள்ளதாகவும் செய்தியில் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. ஜோசப் ஜெகன் என்பவரை இதுவரை பார்த்ததில்லை பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். இதேபோல் அமர் பிரகாஷ் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளதாகவும், அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட ஜெயக்குமார் உதவி இருப்பதாகவும் செய்திகளை பரப்பினர்.