சென்னை: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஜூன் 7 முதல் ஜூன் 9 வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்குப் பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு " No work No pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கப்பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறது. எனினும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இதனிடையே, நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுத்தொகை: அமைச்சர்