சென்னை:கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்தவர் ஜாஃபர் சேட். இவருக்கு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் முறைகேடாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும், வீட்டு மனையை ஜாஃபர் சேட் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக ஜாஃபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் ஜாஃபர் சேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பின் ஐ.பி.எஸ் அலுவலரான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி ஜாஃபர் சேட், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் ஜாஃபர் சேட் மீதான் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறும், அவருக்கு உரிய பதவியை மீண்டும் வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை டி.ஜி.பி.யாக இருந்த ஜாஃபர் சேட் பணி ஓய்வு பெற்ற நிலையில், 2007 - 2008 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஜாஃபர் சேட்டுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறை விசாரணையின் ஒரு பகுதியாக வழக்கு சம்மந்தப்பட்ட பல்வேறு ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாஃபர் சேட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில், கடந்த ஜூன் 20 ஆம் தேதி ஆயிரம் விளக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாஃபர் சேட் ஆஜரானார்.