சென்னை:ஹஜ் புனித யாத்திரை பயணம் இன்று தொடங்குவதை அடுத்து, நேற்றில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் புனித ஹஜ் யாத்திரையாக சவுதி அரேபியாவிற்கு மதினா மெக்காவிற்கு செல்வார்கள்.
இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதோடு அவர்கள் குறைந்த விமான கட்டணத்தில் பயணிக்க தனிச் சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதைப் போல் சென்னையில் இருந்து ஜெட்டா செல்லும் சிறப்பு விமானங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்களும் பயணிக்க உள்ளனர்.
இந்தச் சிறப்பு தனி விமானங்கள் இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரையில் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். சென்னையில் இருந்து ஜெட்டா வழியாக, புனித ஸ்தலமான மக்கா மதினா செல்கின்றனர். இந்த விமானம் இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணி 20 நிமிடத்தில் ஜெட்டா புறப்படுகிறது.
இந்த விமானத்தில் 254 ஹஜ் யாத்திரிகர்கள் செல்கின்றனர். இதை அடுத்து இரண்டாவது விமானம் நாளை காலை 12 மணி 10 நிமிடத்தில் சென்னையில் இருந்து ஜெட்டா புறப்படுகிறது. அதில் 162 யாத்திரிகர்கள் செல்கின்றனர். இதில் முதற்கட்டமாக செல்லும் இஸ்லாமியர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் அயலாக்க தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழி அனுப்பி வைத்தார்.