சென்னை: கரோனா பரவல் தொடங்கியது முதல், நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். புலம்பெயர்ந்த தொழிலாளிகள் சொந்த ஊருக்கு திரும்ப பல இன்னல்களை சந்தித்தனர். நிலைமை ஓரளவு சீரடைந்த பிறகும், தங்கள் சொந்த ஊரிலேயே பலர் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
2,50,000 ஆக குறைந்த எண்ணிக்கை
தற்பொது புலம்பெயர்ந்த தொழிலாளிகள் குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனாவிற்கு முன்பு, ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், 4 லட்சத்து 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்திருந்தனர்.
தற்போது கரோனாவால் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரமாக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் புகார்கள் அளிக்க தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 90 அரசு தொழிற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இங்கு கடந்த பத்து வருடங்களாக, எந்தவித புனரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை.
இதனால் பாழடைந்த கட்டடங்களாக காட்சி அளிக்கும் தொழிற்பயிற்சி கூடங்களை ஆய்வு செய்து, புனரமைக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர்களுக்கு அரசு வேலை- அமைச்சர் மெய்யநாதன்