தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்டி சேலை விநியோக திட்டம்: உண்மைக்கு மாறான தகவல் - ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் காந்தி பதில்! - pongal gift

திமுக அரசு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

வேட்டி சேலை விநியோக திட்டம்: உண்மைக்கு மாறான தகவல்- ஓபிஎஸ்சுக்கு அமைச்சர் காந்தி பதில்
வேட்டி சேலை விநியோக திட்டம்: உண்மைக்கு மாறான தகவல்- ஓபிஎஸ்சுக்கு அமைச்சர் காந்தி பதில்

By

Published : Jan 29, 2023, 10:36 PM IST

சென்னை:"பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம், பொங்கலே முடிந்து 10 நாட்கள் மேலாகியும் இலவச வேட்டி சேலைகள் இன்னும் வழங்கப்படவில்லை" என்ற தலைப்பில் கடந்த 27ஆம் தேதி அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த மறுப்பறிக்கையில் கூறியுள்ளதாவது, ’வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் மிக சீரிய திட்டங்களில் ஒன்றாக 1983ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் 177.64 லட்சம் சேலைகள் மற்றும் 177.23 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய வருவாய் துறையின் தேவைப்பட்டியல் பெறப்பட்டது. அதனடிப்படையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டி சேலை உற்பத்திக்கு தேவைப்படும் பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல் இரகங்களில் 40s சிட்டா, 60s கோன், 40s கோன் நூல் கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது போக எஞ்சிய தேவைப்படும் நூல் இரகங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கும் குழு மூலம் கடந்த செப்டம்பர் 23, 2022 அன்று இறுதி செய்யப்பட்டு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

கோ-ஆப்டெக்ஸ் தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் ஆகிய நிறுவனங்கள் முகமை நிறுவனங்களாக நியமிக்கப்பட்டு கடந்த நவம்பர் 1, 2022 முதல் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டது. வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ள தேவைப்பட்டியலின் படி அனைத்து தாலுகாக்களுக்கும் மேற்படி வேட்டி சேலைகளை விநியோகம் செய்யும் பணிகளை கடந்த டிசம்பர் 15, 2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பொங்கல் பண்டிகைக்கு முன்னரே ஜனவரி 9, 2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட சத்தியா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் விநியோகிக்கும் பணி தொடங்கி வைத்தார். எனவே, வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவலாகும்.

ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் தான் நிறைவு செய்யப்படுகிறது. அதைப்போலவே, நடப்பு 2023ஆம் ஆண்டிற்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இத்திட்டம் வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நிறைவுறும் என்பதே உண்மை.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இலவச வேட்டி சேலை வழங்கும் பணி 2013ஆம் ஆண்டிற்கு மார்ச் 14, 2013-லும், 2014ஆம் ஆண்டிற்கான பணி ஆகஸ்ட், 25 2014-லும் முடிவடைந்துள்ளது. இவ்வாறு, பொங்கல் பண்டிகைக்கு பின்னர், பல மாதங்கள் கழித்து அதிமுக ஆட்சியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டதை ஏனோ பன்னீர்செல்வம் அவர்கள் வசதியாக மறந்துவிட்டார். மேலும் திமுக அரசினால் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது’ என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:புனித வனத்து அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு.. வீரர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details