சென்னை: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய துறைமுக சட்ட முன்வடிவு குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற்றது. ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மண்டவியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டார்.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக
இதில், சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்துசெயல்படுத்த வேண்டும், தூத்துக்குடியில் அமைந்துள்ள வஉசி துறைமுகத்தை சரக்கு மாற்று முனையமாக மாற்றுவதற்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என அமைச்சர் ஏ.வ. வேலு கேட்டுக்கொண்டார்.
மாநில அரசின் உரிமையைப் பறிக்க முயற்சி
இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் சிறு துறைமுகங்கள் தொடர்பாக பேசிய அமைச்சர், 1908ஆம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் சட்டப்படி, துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல் வரையரையப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. இந்த வரைவு சட்டத்தின்படி மேற்கண்ட அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து பறித்திட கூடியதாக உள்ளது என்றார்.
கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம்
கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம் தற்போது ஆலோசனை அமைப்பாக உள்ளது. இவ்வரைவின் விதிகளின்படி இக்குழுமம் சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாகச் செயல்பட உள்ளது. மேலும், இக்குழும் ஒன்றிய அரசின் அலுவலர்களை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்தப் புதிய வரைவு சட்டத்தின்படி பல அம்சங்களில் விதிகளை உருவாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் செல்ல உள்ளது. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என அமைச்சர் ஏ.வ. வேலு கூறினார்.
இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, "இந்திய கடலோரப் பகுதிகளில் உள்ள ஒன்பது மாநிலங்களின் அமைச்சர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் துறைமுகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதில் தமிழ்நாட்டில் 17 சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.