சென்னை:டெல்லியில்நேற்று (மே 06) நடைபெற்ற தேசிய சாகர்மாலா உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசிய போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வலுவான மற்றும் சக்திவாய்ந்த தலைமையின் கீழ் தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்திய அரசின் நிதியுதவி மூலம் கடலூர் மற்றும் கன்னியாகுமரி துறைமுகங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். கடலூர் துறைமுகக் கட்டுமான மேம்பட்டுப் பணிகள் நிறைவடையவுள்ளன.
இத்துறைமுகத்தை இயக்கத்திற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் இதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும். இவ்விடத்தில் தங்களின் கனிவான பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கு இரு புதிய திட்டங்களை சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
முதலாவதாக பாம்பன் கால்வாய் தூர்வாருதல் மற்றும் பாம்பன் கால்வாயில் 2 மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது. இக்கால்வாயை சிறு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் உபயோகப்படுத்தி வருகின்றன. இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த கால்வாய் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும் முக்கிய கால்வாயாக இருப்பதால், தூர்வாரி மேம்படுத்துவது அவசியமாகும்.