சென்னை:டெல்லியில் நேற்று (ஜூலை 20) ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மீண்டும் இன்று (ஜூலை 21) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த அளவிற்கு நீர் திறக்கப்படவில்லை என்றார்.
ஜூன் மாதத்தை பொருத்தவரை 26 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். ஆனால், மூன்று டிஎன்சி நீரை மட்டுமே திறந்து விடப்பட்டதாகவும், அதனுடைய விளைவாக, எவ்வளவுதான் தண்ணி குறைத்து நிர்வகித்தாலும் 20 நாள் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் என்று கூறியுள்ளார். எனவே, இதை முன்கூட்டியே உணர்ந்துதான் கடந்த ஐந்தாம் தேதியே டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
தண்ணீரை சரியாக காவிரியில் விடவில்லை என்றால் அல்லது இரண்டு மாநிலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதனால் கூட அதனை எப்படி பங்கிட்டு கொள்வது என காவேரி மேலாண்மை ஆணையத்திற்கே (Cauvery Management Authority) முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். இந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்த உத்தரவிடுங்கள் எனக் கூறுவதற்கு தான் கடந்த ஐந்தாம் தேதி டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்ததாக கூறினார்.
இதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தாகவும், அதனை எடுத்துக்கொண்டு நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கடிதத்தையும் கொடுத்து சூழ்நிலையை விளக்கியதை புரிந்துகொண்டு அவரும் ஓரிரு நாட்களில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளிடம் இருக்கக்கூடிய காவிரி நீரை எப்படி பங்கிட்டு வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்குவதாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், இருக்கும் காவிரி நீரை விரைவில் வழங்கவும் உத்தரவிடுவதாக கூறியதாக அவர் தெரிவித்தார். ஆகவே, அதை நம்பிக்கையோடு தமிழ்நாடு திரும்பியிருப்பதாகவும், அந்த நம்பிக்கையை செயல்படுத்தினால் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் பயிர்களை காப்பாற்றப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரம்; பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்:இதனிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பான செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'மணிப்பூர் கலவரம் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி வாய் திறந்ததோடு இல்லாமல் விரைவில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். சின்ன மாநிலமான மணிப்பூரில் பிரச்னையை முன்கூட்டியே அறிந்து சரிசெய்து இருக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: Monsoon session: எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைப்பு!